ஈஸியா 30வகை ரெடி டு ஈட் - தொக்கு வகைகள் இதோ.. tamil foods
என்னதான் அவசரம் என்றாலும், குடும்பத்தினருக்கு சத்தாகவும் சுவையாகவும் சமைத்துப் பரிமாற நாம் தயங்குவதே இல்லை. அந்த வகையில் பெண்கள் மட்டுமல்ல…
ஆண்களும், பெரிய குழந்தைகளும்கூட எளிதாகத் தயாரிக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்கியிருக் கிறார் ஓசூரைச் சேர்ந்த சமை யல்கலை நிபுணர் சாந்தி. தொக்கு, குழம்பு, பொடி, சூப் என வேதிக் கலப்பில்லாத இன்ஸ்டன்ட் உணவுகளைச் சுவைத்து மகிழுங்கள்!
1)மணத்தக்காளிக் கீரைத் தொக்கு
தேவையானவை:
மணத் தக்காளிக் கீரை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 10 பல், புளி – சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் – 5, வெல்லம் – சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கீரை, புளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். இது சூடான சாதம், சப்பாத்தி, தோசைக்கு நல்ல சைடு டிஷ். வயிற்றுப்புண்ணுக்கும் நிவாரணம் தரும்.
2)உடனடி வற்றல் குழம்பு
தேவையானவை:
சின்ன வெங்காயம் – 20, புளி – எலுமிச்சை அளவு, பூண்டு – 15 பல், சாம்பார்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயப்பொடி – அரை டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, வெல்லம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வடகம் – சிறிதளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.
வறுத்துப் பொடிக்க:
கடலைப் பருப்பு, உளுந்து, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன் (அனைத்தையும் வெறும் சட்டியில் வறுத்துப் பொடிக்கவும்).
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து வடகம் தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வெங்காயம், பூண்டு சேர்த்துச் சுருள வதக்கி, அத்துடன் சாம்பார்ப் பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு வறுத்த பொடி, வெந்தயப்பொடி, வெல்லம் சேர்த்து நன்றாகக் கொதித்து சுருண்டு வந்ததும் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும். சூடான சாதத்தில் இந்தக் குழம்பு சேர்த்துச் சாப்பிட, சுவை அள்ளும்.
3)பிரசவ மருந்துத் தொக்கு
தேவையானவை:
மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை, தனியா, ஓமம் (இவற்றை வெறுமனே வறுத்து அரைத்து வைக்கவும்) – தலா ஒரு டீஸ்பூன், சிறு எலுமிச்சை அளவு புளியை நெருப்பில் சுட்டு (அ) தணலில் வாட்டி வெந்நீரில் கரைத்து வைக்கவும், பூண்டு – 15 பல், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், பெருங்காயம், பூண்டு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த பொருட்களைச் சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து, கொதித்து எண்ணெய் பிரிந்ததும் எடுத்து ஸ்டாக் செய்துகொள்ளலாம். இந்தத் தொக்கு ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தேவைப்படும்போது சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
4)சின்ன வெங்காயத் தொக்கு:
தேவையானவை:
சின்ன வெங்காயம் உரித்தது – 20, காய்ந்த மிளகாய் – 10, தக்காளி பழுத்தது – 3, கடலைப்பருப்பு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி, புளி – ஒரு கொட்டைப்பாக்கு அளவு, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடலைப் பருப்பு, உளுந்து, சீரகம், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புளி சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சிறிது கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும். இது இட்லி, தோசை என அனைத்துச் சிற்றுண்டிகளுக்கும் ஏற்ற சைடு டிஷ்.
5)திப்பிலித் தொக்கு:
தேவையானவை: கண்டந்திப்பிலி – 5,6 குச்சி, அரிசித் திப்பிலி – 5, 6 குச்சி, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, மிளகு சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், சாம்பார்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், புளிக்கரைசல் – அரை கப், வெல்லம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.