அன்பர்களே..
பக்திக்கும்,பிரேமைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தினை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நிச்சயம் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
உதாரணமாக சொல்லப்போனால் வெறும் பக்தியுள்ள ஒருவனுக்கு துன்பம் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது அவன் கடவுளிடம் சென்று எவ்வாறு தன் நிலையை எடுத்துரைக்கிறான் என்றால், "கடவுளே என்ன இது? எனக்கு இப்படி நேர்ந்து விட்டதே..
நீதான் இந்த துன்பத்தை போக்க வேண்டும்.
அல்லது அதை சமாளிக்கும் ஆற்றலையாவது அருள வேண்டும்"-என்று முறையிடுகிறான்.
ஆனால் பரம்பொருளை காதல் கொண்டு நேசிப்பவனோ அந்த துன்பத்தையே வேறு விதமாக பார்க்கிறான்.
"ஏ ப்ரபோ நீ எனக்கு இந்த கடினத்தை தந்துள்ளாய்..! அதை நான் பரிபூரணமாக ஏற்கிறேன்.
காரணம் இல்லாமல் நீ எனக்கு எதையும் நிகழ்த்த மாட்டாய்..!
ஏனெனில் எனது நலனில் என்னை காட்டிலும் அக்கரை உள்ளவன் நீ. எனவே அந்த இன்னலையும் நான் இனிமையாக ஏற்கிறேன்."
-என்று அந்த துன்பத்தையும் வரவேற்க்க தொடங்கிவிடுகிறான்.
இன்னும் சொல்லப்போனால் “பக்தியின் அதி உன்னத வளர்ச்சி நிலையே பிரேமை ஆகும்.”
இந்த வகையிலே பார்க்கின்றபொழுது ஓர் மன்னனுக்கு மகளாக பிறந்தும், இந்த பொய்யான பௌதீக உலகின் போகங்களை ஒதுக்கி, அந்த பரம்பொருளான கண்ணனிடம் அழிவில்லா காதல் கொண்ட "பக்த மீரா"-வின் சரித்திரம் அனைவருக்கும் பிரசித்தம்.
அவரின் திருவடியை பின்பற்றினால் நமக்கெலாம் நற்கதி நல்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும் இந்த நேரத்தில் நான் ஸ்ரீ சங்கரபகவத்பாதரின் பாஜ கோவிந்தத்தை நினைவில் கொள்கிறேன்.
இந்த பௌதீக உலகின் அவலங்களை மிக அற்புதமாக எடுத்துரைக்கிறார்.
அதிலிருந்து மீளும் வழியையும் அருள்கிறார். நீங்களும் அதனை பொருள் உணர்ந்து அறிந்து ஒழுக வேண்டுகிறேன்.
நாம் மற்றவர்களை பற்றி யோசிப்பதற்கு முன் நாம் நம்மை பற்றி யோசிக்க வேண்டும்.
நம்முள் இருக்கும் ஜீவாத்மாவை பற்றி யோசிக்க வேண்டும். அந்த பரமாத்மாவை பற்றி யோசிக்க வேண்டும்.
இரண்டிற்க்கும் உள்ள உறவைப்பற்றி யோசிக்க வேண்டும். என்று மீண்டும் அந்த பரமாத்மாவோடு ஜீவாத்மாவாகிய நான் சேர்வது என்கிற அற்புதத்தினை பற்றி யோசிக்க கொள்ள வேண்டும்.
இவைகளுக்காகத்தானே இந்த மானுட பிறவி எனும் அரிய வாய்ப்பை நமக்கு அவன் தந்துள்ளான்??
அதிலும் இன்று இருக்கும் உலகச்சூழலை பார்க்கவே பயமாக உள்ளது.
அதில் நடக்கும் சம்பவங்களை நோக்கும் போது மனம் பதைக்கின்றது.
இந்த பௌதீக-உலகின் பொய்யான நிகழ்வுகளை உண்மை என நம்பி மென்மேலும் தேவையற்ற செயல்களையும், அதனால் உண்டாகும் பாவங்களையும் சுமந்து கொண்டிருக்கும் அன்பர்கள் விழிக்க வேண்டும்.
அதற்க்கு நாம் அவர்களுக்கு விழிப்புணர்வு நல்க வேண்டும்.
அது அடியர்களாகிய நம் கடமையும் உரிமையும் ஆகும்.
*நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”*
*ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*