*நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்*
உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் 1473ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் மைகொலாஜ் கோபர்நிக். பல்கலைக்கழகத்தில் படித்தபோது, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்று மாற்றிக்கொண்டார்.
எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார்.
இவரது காலத்துக்கு பிறகே இவரது கோட்பாடுகளை கலீலியோ உள்ளிட்ட பிரபல வானியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆன் தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் என்ற நூலில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார். இதில் பூமி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும், பூமியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.
வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல், சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசு தூதர் என பல துறைகளில் தனது பங்களிப்பை வழங்கிய நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் தனது 70வது வயதில் (1543) மறைந்தார்.