18. எதையும் ஏற்றுக் கொள்
நன்றி - சபீதா ஜோசப்
“இனிக்கின்ற மாம்பழத்தில் கொட்டை இருப்பதுபோல, மணக்கின்ற ரோஜாச் செடியில் முள் இருப்பது போல, வாழ்க்கையில் துன்பம் கட்டாயம் இருக்கும். அதனை ஏற்று நடத்தும் வாழ்வுதான் உண்மையான வாழ்வு” என்கிறார் பேரறிஞர் அண்ணா.
இரவுக்குப் பின் வருவது பகல். துன்பத்திற்குப் பின் வருவது இன்பம். இன்பமும் துன்பமும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதை உணருங்கள். பணம் தேடுவது வாழ்க்கையின் முடிவா? இல்லை துன்பங்களுக்கு மாற்றம் காண்பதுதான் வாழ்க்கை.
நிகழ்காலத்தில் வாழத் தெரியாமல் வருங்காலத்தில் துன்பம், பயம், நம்பிக்கை என்னும் கயிறுகளிலே ஊசலாடுவது மனித குலத்தின் இயல்பு.
“என் வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை வாழ நேர்ந்தால், முன்பு வாழ்ந்தது போலவே வாழ்வேன். கடந்த காலத்தைப் பற்றிக் குறை கூறவோ, எதிர்காலத்தைப் பற்றி அச்சப்படவோ மாட்டேன்.” இது சிந்தனையாளர் வாழ்க்கை. காதலிப்பவர்களால் வாழ்க்கையை திறம்பட கையாள முடியும்.
நள்ளிரவு நேரம். அந்த சேவலுக்கு உடல் நலமில்லாமல் போனது. அப்போது அது தனக்குத்தானே கவலைப்பட்டுக் கொண்டு பேசிக்கொண்டது. “அய்யோ! எனக்கு திடீரென்று உடம்புக்கு முடியாமல் போய்விட்டதே. நாளைக் காலையில் என்னால் கூவ முடியாது போலிருக்கிறதே. பாவம் சூரியன் எப்படி உதிக்கும். பாவம் மனிதர்கள் எப்படி முழிப்பார்கள்” என்று கவலைப்பட்டுக் கொண்டது.
இதை ஒட்டுக் கேட்ட நட்சத்திரம் சொன்னது, “அட மடச்சேவலே! காலம் காலமாக, மக்கள் சேவல்களைக் கொன்று தின்று வருகிறார்களே. கணக்கெடுத்துப் பார், நட்சத்திரங்களைவிட பலியான சேவல்கள் அதிகமாக இருக்கும்.
ஆனால், ஒவ்வொரு நாளும் சூரியன் மட்டும் தவறாமல் உதித்து உலகிற்கு ஒளி வழங்குகிறது. மறுபடியும் மறைந்து எழுகிறது. இதைப் புரியாமல் உன்னால்தான் சூரியன் உதிப்பதாக சொல்கிறாயே” என்றது.
பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்றதாம். அப்படித்தான் சேவலும் நினைத்தது. ஒன்றுக்கும் உதவாத திறமை கொண்ட அற்பர்கள். இப்படித்தான் சிந்திப்பார்கள் என்கிறது ஒரு சீனக்கதை.
ஒரு மங்கோலியனிடம் ஒரு குதிரை இருந்தது. அது ஒருநாள் மலைக்காட்டுப் பக்கம் ஓடிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட பக்கத்து வீட்டுக்காரன் அனுதாபப்பட்டு சொன்னான்.
“இது உனக்கு போதாத காலம் போலிருக்கிறது” என்று.
அதைக் கேட்டு கலங்காத மங்கோலியன் சொன்னான். “விடு! எல்லாம் நன்மைக்கே”
சிலநாட்கள் சென்றதும் ஓடிப்போன குதிரை திரும்ப வந்தது. அது தனியாக வராமல் கூடவே காட்டிலிருந்து ஐந்து குதிரைகளையும் அழைத்து வந்திருந்தது. அன்று முதல் மங்கோலியன் ஆறு குதிரைகளுக்குச் சொந்தக்காரன் ஆனான். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் வந்து சொன்னான். உனக்கு அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்துவிட்டது என்று இதைக் கேட்டு மங்கோலியன் சந்தோஷமாய் சொன்னான். “எல்லாம் நன்மைக்கே”.
மறுநாள் காட்டுக் குதிரை ஒன்றின்மேல் மங்கோலியனின் மகன் சவாரி செய்ய ஏறினான். குதிரை அவனை கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்தவன் கால் உடைந்து படுத்த படுக்கையானான். அப்போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து அனுதாபத்துடன் கூறினான். உனக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது என்று. அதைக் கேட்டு கலங்காமல் மங்கோலியன் சொன்னான். ‘எல்லாம் நன்மைக்கே’ என்று புன்னகைத்தான்.
இதைக் கேட்டதும் அண்டை வீட்டுக்காரனுக்கு எரிச்சலானது. “எதற்கெடுத்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிறாயே, கால் உடைந்து உன் மகன் கிடப்பது உனக்கு நன்மையா? இது ஒரு கெடுதல் என்று உனக்குத் தெரியவில்லை?” என்று கத்தினான். அதற்கும் அமைதியாக மங்கோலியன் ‘எல்லாம் நன்மைக்கே’ என்றான்.
சில நாட்கள் கடந்த நிலையில் அந்த நாட்டு அரசன், தனது படைக்கு ஆள் திரட்டுவதற்காக அந்த கிராமத்துக்கு வந்தான். இளைஞர்களையும், பையன்களையும் பட்டாளத்தில் சேர்ப்பதற்காக வலுக்கட்டாயமாக பிடித்துப் போனார்கள்.
அந்த கிராமத்தில் எல்லா வாலிபர்களும் இழுத்துச் செல்லப்பட மங்கோலியன் மகன் மட்டும் வீட்டில் இருந்தான். அதாவது கால் உடைந்து கிடந்ததால் அரசன் அவனை படைக்கு லாயக்கற்றவன் என்று விட்டு விட்டான். அப்போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து கேட்டான், இதுதான் எல்லாம் நன்மைக்கா!”
எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் கலக்கம் குழப்பம் வராது. நல்லது கெட்டது இரண்டையும் ஏற்றுக் கொள்ளும்போது சந்தோஷமே.
எல்லா பண்புகளும் ஒருவரிடமே குடியிருக்கும் என்று சொல்லமுடியாது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டு வாழும்போது சந்தோஷமே மிஞ்சும்.
தொடரும்...
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!