Positive 🤗 Only @positive_vibes_369 Channel on Telegram

Positive 🤗 Only

@positive_vibes_369


Positive 🤗 Only (English)

Are you tired of all the negativity and drama on social media? Looking for a place where you can surround yourself with positive vibes only? Look no further than our Telegram channel, Positive 🤗 Only! At Positive 🤗 Only, we believe in spreading positivity, uplifting others, and creating a safe space for everyone to share their thoughts and experiences. Our community is made up of like-minded individuals who are dedicated to spreading joy and positivity in the world. Whether you need some words of encouragement, motivational quotes, or just a place to share your wins, Positive 🤗 Only is the perfect place for you. Join us today and be a part of our uplifting community! Remember, positivity is contagious, so let's spread it together! #PositiveVibesOnly

Positive 🤗 Only

14 Jan, 06:34


🦋நம்மை சுற்றி எப்போதும் ஒரு ஏமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது...

🦋நாம் செய்யநினைத்ததை அது செய்ய விடாமல் தடுத்து கொண்டே இருக்கிறது
அதுதான் மாயை என்கிறார்கள்...

🦋அது எப்போதும் உங்களை தன் மாயையின் மயக்கத்திலே வைத்திருக்க செய்கிறது

🦋எப்போது நீங்கள் செய்யும் செயல்களில் ஆழ்ந்த கவனத்துடன் செய்கிறீர்களோ அப்போது மாயையின் மயக்கத்தில் இருந்து விழிப்பு நிலைக்கு வந்து விடுகிறீர்கள்

🪷நாம் விழிப்புடன் செய்யும் செயல்கள் மூலம் இறந்த காலம் மற்றும் எதிர்கால கவலைகளில் விடுபட்டு நிகழ்காலத்தில் அமைதியுடன் இருப்பதற்க்கு வழிவகை செய்கிறது


🦋சந்தோசம்🦋

Positive 🤗 Only

08 Jan, 03:44


நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் மேல் மிகுந்த விழிப்புணர்வு தேவை...

ஏனெனில் உங்கள் நம்பிக்கையை உண்மையாக மாற்றும்
மாபெரும் சக்தி உங்களுக்குள் இருக்கிறது...

ஏகப்பட்ட நம்பிக்கைகள் உண்மைகளாக வலம் வருவதை நாம் அனைவரும் காண முடிகிறது...

Positive 🤗 Only

05 Jan, 14:41


உங்கள் ஆரம்பக் காலம் மற்றும் கடந்த காலக் கதைகளை வைத்து...

உங்கள் மொத்த வாழ்வையும்

வரையறைப்படுத்திக்கொள்ள வேண்டாம்...

ஒவ்வொரு நாளையும் புதிதாகத் தொடங்க உங்களிடம் சக்தி உள்ளது...


நமது எண்ணமே நமக்கான முழு சக்தி

Positive 🤗 Only

25 Dec, 12:29


ஒரு குட்டிக் கதை...!!

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?


பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...!!!

Positive 🤗 Only

12 Dec, 04:27




உங்கள் மனதில் எப்போதும் உயர்வான சிந்தனைகளை மட்டுமே துணிந்து சிந்தியுங்கள்...

ஏனெனில் உங்கள் சிந்தனைகளின் உயர்விற்கு ஏற்பவே உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும்..

உங்களின் முன்னேற்றத்திற்கு மற்றவர்கள் வேண்டுமானாலும் தடையாக இருக்கலாம்..

ஆனால் ஒருபோதும் உங்களுக்கு நீங்களே தடையாக இருக்கக்கூடாது.


உயர்ந்த மற்றும் வலுவான எண்ணமே பல மடங்கு பலம் மற்றும் வெற்றியைத் தரும்.


Positive 🤗 Only

03 Dec, 02:47


கடலில் இருக்கிற அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூடக் கப்பலை மூழ்கடிக்க முடியாது. கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்.

அது போல் தான் வாழ்வில் எந்தப் பிரச்சனையும் உங்களைப் பாதிக்காது நீங்கள் அனுமதித்தால் தவிர.

ஆக இது போன்ற சூழ்நிலையிலே ஒருவரை உயர்த்திப் பிடிக்கிற ஒரே ஆள் அவரின் மனம் தான்.

தயங்குபவர்களுக்கும் பயப்படுபவர்களுக்கும் யோசிப்பவர்களுக்கும் இந்த உலகில் எதுவும் சாத்தியமில்லை.

துணிவும் முயற்சியும் தான்
வெற்றியின் முதற்படி.

அதாவது நகர்ந்தால் தான் நதி அழகு. வளர்ந்தால் தான் செடி அழகு. முயன்றால் தான் மனிதன் அழகு.

மூச்சு விடுபவர் எல்லாம் மனிதன்  அல்ல. முயற்சி செய்பவரே மனிதன்.

ஆகையால் அவசரப்படாதீர்கள் ஆத்திரப்படாதீர்கள். கொஞ்சம் நிதானத்தைக் கையிலெடுங்கள்.


உங்கள் மனதைத் தயார்படுத்துவதில் தான் உங்கள் வெற்றியே அமையும்.

Positive 🤗 Only

27 Nov, 02:55


★━━★━━★━━★━━★━━★━━★

  
சரித்திரம் படைக்க ஜாம்பவனாக இருக்க தேவையில்லை...

அவமானத்தை சேகரித்தாலே போதுமானது.



  ★━━★━━★━━★━━★━━★━━★

Positive 🤗 Only

20 Nov, 02:26


நமக்கான வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தெரியுமா?

சாலைகளில் என்ன நடந்தாலும் சரி பிறருக்கு என்ன நடந்தாலும் சரி நமக்கு என்ன என கடந்து செல்பவர்கள் பலர். ஆனால் அது என்ன பிரச்னை எப்படி தீர்க்க முடியும் என சாமர்த்தியமாக இருந்து பிரச்னை தீர்ப்பவர்கள் பல பேர். அவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றியாளராக மாறுகிறார்கள். வாய்ப்புகளும் அவர்களைத்தேடி வருகின்றன.

வாய்ப்பு என்ற சந்தர்ப்பம் நமக்கு அமையும்பொழுது அதை சாமர்த்தியமாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்

எப்படி கற்றுக்கொண்டால் நாம் நிச்சயமாக ஒரு படி முன்னே செல்லலாம். அப்படி நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை ஒரு இளைஞன் தன் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எப்படி பயன்படுத்திக் கொண்டான் என்பதே இப்பதிவு.

ஒரு வசதிமிக்க பெரியவர் தனது காரை ஓட்டிக்கொண்டு வெகுதொலைவு பயணம் செய்தார். திடீரென்று ஓர் இடத்தில் கார் பழுது ஆகிவிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு கோளாறைச் சரிசெய்ய முயற்சித்தார். ஆனாலும் கார் கிளம்பவில்லை. இதைத் தொலைவிலிருந்து கவனித்த ஓர் இளைஞர் அருகில் வந்தார். "ஐயா, தாங்கள் அனுமதித்தால் நான் என்ன கோளாறு என்று பார்ப்பேன்?" என்று கேட்டார். பெரியவர் அனுமதி தந்தார். இளைஞர் ஒரு பத்து நிமிடம் கழித்து வண்டியின் கோளாறைச் சரிசெய்ததுடன், எங்கே பிரச்னை என்பதையும் பெரியவரிடம் விளக்கினார்.

உடனே பெரியவர் நன்றியோடு அந்த இளைஞருக்கு ஓர் ஐம்பது ரூபாயை எடுத்துக்கொடுத்தார். இளைஞர் அதை வாங்க மறுத்துவிட்டு "ஐயா, உங்கள் முகவரியைத் தாருங்கள் எனக்கு நன்றாகக் கார் ஓட்டவும், மெக்கானிக் வேலை செய்யவும் தெரியும். நம்பிக்கையோடும் நான் நடந்துகொள்வேன். ஆனால் கடந்த மூன்றாண்டுகளாகச் சரியான வேலை கிடைக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் சிபாரிசு செய்து ஏதாவது ஒரு நல்ல இடத்தில் வேலை கிடைத்தால் மகிழ்வேன்" என்றார். பெரியவர் தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். மறுவாரம் அந்தப் பெரியவரின் டிரைவராக மாறினார் இளைஞர்.

தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார் இந்த இளைஞர். தன்னைச் சரியாக வெளிப்படுத்திக் கற்றுக்கொண்டவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் சிறப்பானதையே வழங்குகிறது.


"நல்ல எண்ணம் நல்ல செயல்முகத்திற்கு அழகைக் கூட்டுகிறது" எனவே நல்ல எண்ணமும் செயல்பாடும் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும் அதே போல்
வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள். அதிலிருந்து முன்னேற பாருங்கள்.

Positive 🤗 Only

19 Nov, 14:32


For more useful telegram channels and groups <click here>

Positive 🤗 Only

18 Nov, 07:27


_*கடின உழைப்பு நிச்சயம் வெற்றியைத் தரும்!*_

* 🌹🌹🌹சில சமயங்களில் நமக்கு பெரிய முயற்சிகள் கூட வெற்றிக்கு மிக அருகில் வந்து அது தோல்வியில் முடிந்து விடலாம். ஆனாலும் இடைவிடாது அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு யார் ஒருவர் செயல்படுகிறாரோ தோல்விகளை தோற்கடிக்க போராடுகிறாரோ அவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியாளராக ஜொலிக்கிறார்கள்.

இடைவிடாது முயற்சி என்பதுதான் மிக முக்கியமான ஒன்று பெரிய முயற்சி. தோற்றாலும் சரி, சிறிய முயற்சி தோற்றாலும் சரி ஆனால் என்றைக்குமே விடா முயற்சி மற்றும் தோல்வி அடைந்ததாக சரித்திரமே இல்லை. விடாமுயற்சி மட்டுமே எப்படியும் நம்மை வெற்றியாளர் ஆக்கிவிடும். ஒரு விளையாட்டு வீரரின் உழைப்பு முயற்சி இவற்றை இந்த பதிவில் படியுங்கள்.

புகழ்பெற்ற நீச்சல் வீராங்கனை டான் ஃப்ரேசர் (Dawn Fraser) என்பவர். ஆஸ்திரேலியாவை சார்ந்த இந்த வீராங்கனை. பல சமயம் அபாரமாக நீந்தி முதலிடம் பெற்றவர். ஆனால் முக்கியமான பெரிய போட்டிகளில் இரண்டாமிடம் பெற்றார். இந்த நிலை அவருக்கு கஷ்டமாக இருந்தது. எனவே உடலில் சோர்வு இருந்தாலும், "நல்லதே நடக்கும்" என்று எண்ணிக்கொண்டு சிந்தனையில் பின்வாங்காமல் நீந்த ஆரம்பித்தார். இந்த விடாமுயற்சியால் 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் நீந்திய முதல் வீராங்கனை என்ற பெயர் பெற்றார்.

ஆங்கில அகராதியை முதலில் உருவாக்கியவர் சாமுவேல் ஜான்சன். இந்த அகராதியை உருவாக்க அவர் எடுத்துக்கொண்ட காலம் முப்பத்து ஆறு ஆண்டுகள். ஆனால், அவர் இறந்து 13 வருடம் கழித்துத்தான் இந்த அகராதியின் முக்கியத்துவத்தை உலகம் கண்டது. சாமுவேல் ஜான்சன் அடிக்கடிக் கூறியது,
"வாழ்க்கையின் மகத்தான சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல, விடா முயற்சியினால் செய்யப்பட்டவையே" என்பதாகும்.

சில பெரிய முயற்சிகளும் வெற்றிக்கு அருகில் தோல்வியைத் தரலாம். ஆனாலும் இடைவிடாது முயல்பவர்கள்தான் அந்தத் தோல்விகளையும் தோற்கடித்து வெல்கிறார்கள். நாம் முயற்சி செய்து விட்டோம் அது பலன் அளிக்கவில்லை என்று மட்டும் நாம் சோர்வடைந்து விட்டால் போதும் அதுவே நமக்கு மிகப்பெரிய தோல்வி. கடுமையான உழைப்புடன் விடாமுயற்சி மட்டுமே நம்மை உயர்த்தும். உழைப்பையே வெல்லலாம். நாம் அறிந்துகொள்ள வேண்டியவற்றை அனுபவத்தின் மூலமாகத்தான் அறிகிறோம்.

🌹🌹🌹

Positive 🤗 Only

07 Nov, 02:54


நம் மனதில் தேவையற்ற பயம் எதற்கு? வேண்டாமே!

நம்மில் சிலருக்கு இப்படியொரு பழக்கம் இருக்கும். யாருக்காவது கெட்டது நடந்தால், அது நமக்கும் நடந்துவிடுமோ? என்று எண்ணி பயப்படுவதுண்டு. இதுபோன்ற தேவையற்ற பயத்தை எவ்வாறு நீக்குவது? இதைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் ஒரு அம்மாவும், மகனும் இருந்தார்கள். அதில் அந்த மகனுக்கு ஒரு பிரச்னை இருந்தது. அது என்னவென்றால், யாருக்காவது கெட்டது நடப்பதை பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ நமக்கும் அப்படி நடந்துவிடுமோ? என்று எண்ணிப் பயப்படுவான். இதை கவனித்த அந்த தாய் தன்னுடைய மகனை குணப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், அந்த ஊரில் இருக்கும் சிறந்த மனோத்தத்துவ நிபுணரிடம் தன் மகனை அழைத்துச் செல்கிறார்.

அந்த தாய் தன்னுடைய மகனின் பயத்தைப் பற்றி அந்த மனோதத்துவ நிபுணரிடம் விவரிக்கிறார். அவரும் அந்த பையனை சிறிது நேரம் தனியாக கூட்டிச் சென்று பேச்சுக் கொடுக்கிறார். அந்த டாக்டர் அந்த பையனுடைய மனது இருந்த நிலையை புரிந்துக் கொண்டு அவனுக்கு அறிவுரையும் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

டாக்டர் பெரிதாக சிகிச்சை ஏதும் செய்யாததைப் பார்த்த தாய் சலித்துக் கொண்டார், ‘இவர் என்ன மாத்திரை, மருந்து எதுவுமே தரவில்லையே?’ என்று நினைத்து வேதனையடைந்தார்.

சரியாக ஆறு மாதங்கள் கழித்து அந்த தாய் கையில் பூங்கொத்துடன் அந்த டாக்டரை சந்திக்க வந்தார். அந்த பூங்கொத்தை டாக்டரிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக பேசத்தொடங்கினார். ‘டாக்டர் நீங்கள் அப்படி என் பையனிடம் என்னதான் கூறினீர்கள்? முன்பு போல சோகமாகவும், சோர்வாகவும் அவன் இருப்பதேயில்லை. இப்போதெல்லாம் அவன் முகத்தில் ஒரு தெளிவு இருக்கிறது’ என்று ஆச்சர்யமாக கேட்டார்.

அதற்கு அந்த டாக்டர், ‘அம்மா! உங்கள் பையன் இங்கே வந்தபோது அவனுக்குள் சுயநலம் அதிகமாக இருந்தது. அதனால்தான் யாருக்காவது கெட்டது நடந்தால் அவர்களைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் தனக்கு அது நடந்து விடுமோ? என்று பயந்தான். அந்த எண்ணத்தை சிறிது மாற்றி பொது நலமாக அவனுக்கு யோசிக்கக் கற்றுக்கொடுத்தேன்

யாருக்காவது கெட்டது நடக்கும் பொழுது அவர்களுக்கு ஏதேனும் நம்மால் உதவி செய்ய முடியுமா? அல்லது அவர்களுக்காக வேண்டிக் கொள்ள முடியுமா? என்று யோசித்துப்பார் பயம் தன்னாலேயே குறைந்துவிடும்’ என்று கூறினேன்.

‘அதுபோலவே அவனும் யோசித்ததால், அவனுள் இருந்த பயம் வெளியே போய் இப்போது தெளிவான ஆளாக மாறிவிட்டான்’ என்று கூறினார்.

எவ்வளவு பெரிய பிரச்னைகக்கு எவ்வளவு சிறிய தீர்வு இருந்திருக்கிறது பாருங்கள். அது தெரியாமல்தான் நாமும் வாழ்வில் தேவையில்லாத பல விஷயங்களுக்கு பயந்துக் கொண்டிருக்கிறோம். இனி அவ்வாறு பயம் தோன்றும் போது இந்த அறிவுரையை நினைவில் வைத்துக் கொள்வோம்.

முயற்சித்துப் பாருங்கள்.

Positive 🤗 Only

20 Oct, 16:14


புத்தகங்கள்.

எந்தப் புத்தகமும் என்னை முட்டாளென்று
இழிவுபடுத்தியதேயில்லை!
மாறாக,என் அறிவைக் கிளறி விட்டது!

எந்த புத்தகமும் என்னைப் பைத்தியமென்று
பறைசாற்றியதேயில்லை!
மாறாகத் தெளிவை எனக்குத் தேடித் தந்தது!

எந்தப் புத்தகமும் என்னைப் பயன்படாதவனென்று விலக்கி வைத்ததேயில்லை!மாறாக,என் தோள்களைத் தூக்கி விட்டது!

எந்தப் புத்தகமும் எனக்குத்
துரோகமிழைத்ததேயில்லை!
மாறாக,நேசத்தை நெஞ்சில் நிரப்பியது!

எந்தப் புத்தகமும் எனக்குப் பகைமையைப்
படிப்பித்ததேயில்லை!மாறாக, நாளும் நட்பை வளர்த்தது!

எந்தப் புத்தகமும் புகைபிடிக்கவோ, மதுவருந்தவோ என்னை அழைத்ததேயில்லை! மாறாக,
ஒழுக்கத்தின் உயர்வை ஊட்டியது!

எந்தப் புத்தகமும்திருடவோ, பொய் சொல்லவோ எனக்குக் கற்பித்ததேயில்லை!
மாறாக, உழைப்பையும், உண்மையையும் ஒருங்கே உணர்த்தியது!

எந்தப் புத்தகமும், எனக்கு அநாகரிக வார்த்தைகளை அள்ளிக் கொடுத்ததேயில்லை!மாறாக,அன்பின் சொற்களையே அளித்தது!

மனிதர்களை விட அதிகமாக மானுடம் பேசுவதும், வளர்ப்பதும் புத்தகங்களாதலால்,
புத்தகங்களோடு பழகுங்கள்!

Positive 🤗 Only

14 Oct, 16:07


_*உழைக்காமல் நிச்சயம் உயர்வு கிடைக்காது!*_

* 🌹🌹🌹நம்மில் பலர் உழைக்காமல் உயரவேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் கடைசியில் இவர்கள் எதையுமே சாதிக்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். உழைக்க வேண்டும் என்ற மனம் நமக்கு எப்பொழுது வருகிறதோ அப்பொழுதே நாம் வெற்றியின் வாசலுக்கு வந்து விட்டோம் என்று நான் அர்த்தம்.

உழைக்காமல் உயரவேண்டும் என்று நினைப்பவர்கள் வேண்டுமானால் தற்காலிக உயரத்திற்கு ஏறலாம். ஆனால் அவர்களால் நிரந்தரமான உயரத்துக்கு ஏறமுடியாது.

வியட்நாமில் வாழ்ந்த கேப்டன் மாக்ஸ் க்ரீலெண்டின் என்பவரது வாழ்க்கைதான் நமக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். உழைப்பின் மகத்துவத்தை இப்பதில் ஒரு சின்ன எடுத்துக்காட்டோடு பார்ப்போம்.

1968 ஆம் ஆண்டில் வியட்நாமில் வாழ்ந்த கேப்டன் மாக்ஸ் க்ரீலெண்டின் என்பவரது இரு கால்களும் இடது கையும் ஒரு வெடிகுண்டு வீச்சால் பறிபோயின. மிகவும் மனம் நொந்து காணப்பட்ட அவர் பின்பு தன்னைத்தானே ஆறுதல் படுத்திக்கொண்டு தனது சொந்த ஊரான ஜார்ஜியா சென்றார். அங்கு அரசியலில் ஈடுபட்டு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணிசெய்தார்.

ஜனாதிபதி கார்டர் இவரது திறமையைப் பார்த்து மிகப்பெரிய ஓர் அரசு நிறுவனத்தின் நிர்வாகியாக்கினார். பிறகு ஜார்ஜியா மாநிலத்தின் செயலராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவராகத் தேர்வு செய்யப்பட்டார். சக்கர நாற்காலியில் அமர்ந்து இவர் அருமையாகப் பேசுவதைக் கவனிக்க மக்கள் கூட்டம் அலைமோதியதாம். மூன்று கொள்கைகளை இவர் வாழ்வில் கொண்டிருந்தாராம்.

ஒன்று, எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்.

இரண்டு, சக்கர நாற்காலியை உருட்ட வேறு ஒரு கை உள்ளது. எனவே, ஒரு கதவு மூடினால் அடுத்த கதவு திறக்கும் என்று நம்பியது.

மூன்றாவது, இறைவன் எப்போதும் நம்மைக் காப்பார் என்று நம்புவது.

எங்கு, எந்த நிலையில், எப்படி இருக்கிறோம்? என்பதைவிட எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எப்படி இருந்தாலும் உழைக்கும் மனம் பெற்றிருந்தால் உயரலாம் என்பதற்கு கேப்டன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நாம் இனியாவது உழைப்பின் அருமை பெருமைகளை அறிந்து,


நம் வாழ்க்கையில் உழைப்பை உயிர் மூச்சாய்க் கொண்டு உயர்ந்திட முயன்றிடுவோம்.

🌹🌹🌹

Positive 🤗 Only

26 Sep, 06:56


ஒரு வீட்டு வாசலில்
யாசகன் ஒருவன் தர்மம் கேட்டு நின்றிருந்தான்.

அம்மா...
தாயே...
ஏதாவது
தர்மம் பண்ணுங்கம்மா !

அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்து பார்த்தாள்..

அங்கே
வீதியில் விளையாடிக்
கொண்டு இருந்த,
தனது ஐந்து வயது மகளை அழைத்து,

அவளது கைகளால் அரிசியை,
அள்ளி கொடுத்து,

யாசகனின் பாத்திரத்தில்
இட சொன்னாள்.

பெற்று
கொண்ட யாசகனும், பக்கத்து
வீட்டுக்கு சென்று பிச்சை கேட்க சென்றான்.

அந்த பெண்மணியும் விளையாடி கொண்டிருந்த தனது மகளை கூப்பிட்டு,

அவளது
கையால் அரிசியை அள்ளி யாசகனுக்கு பிச்சை அளிக்க சொன்னாள்.

காலங்கள் உருண்டோடின..

இரண்டு பெண்மணி
களுக்கும் வயது முதிர்ந்து போனது.

இரு சிறுமிகளும் வளர்ந்து பெரியவர்
களாகினர்...

அவரவர்கள்
தம் தாய் காட்டிய வழியில் தர்மங்களும் தொடர்ந்தன...

ஒரு நாள்,
அந்த முதிய பெண்மணிகள் இருவருமே இறந்து வானுலகம் சென்றனர்.

அங்கே,
அந்த முதல் வீட்டு பெண்மணிக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது..

மற்றவளுக்கோ அதற்கு கீழான இடமே கிடைத்தது.

உடனே,
அவள்... இறைவனிடம் பதறிக் கதறியே முறையிட்டாள்.

இருவருமே,
ஒரே மாதிரி தானே,
தானம் செய்தோம்,

எனக்கு மட்டும் இங்கே ஏனிந்த பாரபட்சம்,
ஏற்ற இறக்கம் என்று வாதிட்டாள்.

அதற்கு இறைவனோ...

முதலாமவளோ, தனக்கு
பிறகும், தன் குழந்தையும், இந்த தானத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்,

குழந்தையின் கையில் அரிசியைக் கொடுத்து தானம் செய்ய சொன்னாள்.

ஆனால்,
நீயோ...
உன் கைகளால் எடுத்தால்,
அரிசி நிறையவே செலவாகும் என்ற எண்ணத்திலே,

உன் குழந்தையின் கையால்,
எடுத்தே தானமிடச் செய்தாய்...

இருவரது
செயலும்
ஒன்றே..

எனினும் எண்ணங்கள வெவ்வேறு என்றார்.

எனவே,
எந்த செயலை செய்தாலும்,

மேலான எண்ணங்களோடு
செய்யும் செயல்களே

நம் வாழ்க்கைக்கும் தொழிலுக்கும்,
ஆத்ம
திருப்திக்கும்,
மனநிறைவான உணர்வுக்கும்
வழி காட்டும்

சுயலாபத்துக்காக செய்யும் செயல்களை
விட,

பொது நலத்துக்காக செய்யும் செயல்களே வலிமை வாய்ந்தவை,
மேலானவை,


அதுவே இறைவனின் நியாயத் தராசில் எப்போதும் உயர்ந்தே நிற்கும்..

Positive 🤗 Only

23 Sep, 07:55


வாழ்க்கை பயணத்தில் அடுத்தவர்கள் உங்களுக்கு கொடுக்கும் விமர்சனங்கள்

சரியானதாக இருப்பின் திருத்தி விட்டும்

தவறானதாக இருப்பின் சிரித்து விட்டும் நகருங்கள்.!

Positive 🤗 Only

16 Sep, 06:51


🌺யாரும் உங்கள் எதிரி அல்ல,
உங்களை எரிச்சலூட்டும் எவரும்
பொறுமையையும் அமைதியையும் உங்களுக்குக் கற்பிக்கிறார்கள்.

🌺உங்களை கைவிடும் எவரும் --உங்கள் சொந்தக் காலில் எப்படி நிற்பது என்று உங்களுக்குக் கற்பிக்கிறார்கள்.

🌺உங்களை புண்படுத்தும் எவரும் --மன்னிப்பு மற்றும் இரக்கத்தை உங்களுக்கு கற்பிக்கிறார்கள்.

🌺நீங்கள் வெறுக்கும் எதையும் --உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது, நிபந்தனையற்ற அன்பு.

🌺நீங்கள் அஞ்சும் எதுவும் --உங்கள் அச்சங்களை வெல்லும் தைரியத்தை உங்களுக்குக் கற்பிக்கிறது.

🌺உங்களால் கட்டுப்படுத்த முடியாத எதுவும் --விடு என்று உங்களுக்குக் கற்பிக்கிறது.

🌺மனிதனிடமிருந்து நீங்கள் பெறும் எந்த "இல்லை" --சுதந்திரமாக இருக்க கற்றுக்கொடுக்கிறது.

🌺நீங்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்சனையும் --பிரச்சினைகளுக்கான தீர்வை எவ்வாறு பெறுவது என்பதை உங்களுக்கு கற்பிக்கிறது.

🌺மக்களிடமிருந்து நீங்கள் பெறும் எந்தத் தாக்குதலும் --சிறந்த தற்காப்பு வடிவத்தை உங்களுக்குக் கற்பிக்கிறது.

🌺உங்களை இழிவாகப் பார்க்கும் எவரும் --படைப்பாளரை நோக்கிப் பார்க்கக் கற்றுக்கொடுக்கிறார்கள்.

🌺வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நிகழும் பாடத்தை எப்போதும் கவனியுங்கள்.

🌺கண்ணியமாகவும், அமைதியாகவும், மென்மையாகவும், கடவுளுக்கு நன்றியுள்ளவராகவும் இருங்கள், ஏனென்றால் அவர் இறுதிவரை உங்களுடன் இருப்பார்.

🌺வாழ்க்கை எனக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.

🌺என் குறுக்கு வழியில் மக்களை நான் பார்க்கவில்லை, ஏனென்றால் மனிதர்கள் நம்பகமானவர்கள் அல்ல.

🌺என் நம்பிக்கையின் ஆசிரியராகவும் முடிப்பவராகவும் நான் கடவுளை மட்டுமே பார்க்கிறேன்.

R E F L E C T I O N S

🌺உங்கள் வாழ்க்கையை யாரும் காட்டிக்கொடுக்காமலோ, புண்படுத்தாமலோ, ஏமாற்றமடையாமலோ, அவமானப்படுத்தாமலோ அல்லது புண்படுத்தாமலோ நீங்கள் வாழ்கிறீர்களோ, அப்போது நீங்கள் தகுதியான எதையும் செய்யவில்லை என்று அர்த்தம்.

🌺வாழ்க்கையின் அழகு, அது ஏமாற்றங்கள் மற்றும் துரோகங்களுடன் வரும், அதுவும் நீங்கள் எதிர்பார்க்காதவர்களிடமிருந்து.

🌺துரதிர்ஷ்டவசமாக, நம்மில் சிலர் இந்த துரோகங்கள் மற்றும் ஏமாற்றங்களை நினைத்து அழுவதில் அதிக நேரத்தை செலவிடுகிறோம், மேலும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பலியாகிவிடுகிறோம்.

🌺ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள்: கோபத்தை அடக்குவது சுவரில் தலையை தட்டி மற்றவர் வலியை உணர வேண்டும் என்று எதிர்பார்ப்பது போன்றது. நீங்கள் உங்களை மட்டுமே காயப்படுத்துகிறீர்கள்.

🌺உண்மை என்னவென்றால், உலகம் எரிச்சலூட்டும், குறும்பு, முட்டாள் மற்றும் நன்றியற்ற மனிதர்களால் நிரம்பியுள்ளது, மேலும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் அல்லது இன்னொரு கட்டத்தில் நீங்கள் அவர்களை சந்திக்க நேரிடும். ஆனால், அவர்களை ஞானத்துடனும் முதிர்ச்சியுடனும் கையாள்வதே சிறந்த விஷயம்.

🌺எல்லோரும் உங்களை நேசிக்கவோ, உங்களைப் போல் சிந்திக்கவோ அல்லது உங்களைப் போல் நடந்துகொள்ளவோ முடியாது... ஒருபோதும்.

🌺சில விஷயங்களை சகித்துக்கொள்ளவும், கவனிக்காமல் இருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும், மற்றவர்களின் குறைகளை புதைத்துவிட்டு வாழ்க்கையை தொடர முயற்சிக்க வேண்டும்.

🌺கோபம், வெறுப்பு மற்றும் சகிப்பின்மை ஆகியவை உலகின் பெரும்பாலான பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளன, அவை எதையும் தீர்க்கவில்லை.

🌺வாழ்க்கை குறுகியது, உங்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது
வலியை எடுத்துக்கொண்டு, அந்த சிறப்புமிக்க நபரை மன்னித்து, உங்கள் மனக்குறைகளை தீர்த்துக்கொள்ளும்படி உங்களை மன்றாடுகிறேன்.

🌺தைரியத்தைக் கூட்டி, நீங்கள் புண்படுத்திய நபரிடம் மன்னிப்புக் கேளுங்கள்.

🌺வாழ்க்கை என்பது உங்களிடம் உள்ள பணம், வீடுகள் அல்லது நிறுவனங்களால் அளவிடப்படுவதில்லை, மாறாக மற்றவர்களின் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தால் அளவிடப்படுகிறது.


வாழ்க வளமுடன்

Positive 🤗 Only

14 Sep, 09:08


மனதை தொட்ட
நம்பிக்கை வரிகள்...

ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!

ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!

கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி!

கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!

இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!

கனவு நிறைவேறும்வரை கலைத்து விடாதே முயற்சியை ஏனெனில்..

முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!

வெற்றிப்பாதை!!

உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!

அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது!

இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!

துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது!

ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது!

தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது!

செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!

பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!

மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது!

புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!

தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!

தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!


வெற்றி நமக்கே

Positive 🤗 Only

25 Aug, 16:17


சுலபமாக பணம் சம்பாதிக்க வேண்டுமா? அப்போ இந்தக் கதை உங்களுக்குத்தான்!

இந்த உலகில் நிறைய பேர் கஷ்டமே படாமல் சுலபமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சுலபமாக பணம் சம்பாதிப்பது இப்போது வேண்டுமானால் எளிமையாக இருந்தாலும், அதனால் நமக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஒரு அழகான காட்டில் ஒரு அழகான பறவை அந்த காட்டில் சுற்றிப் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மனிதன் கைகள் நிறைய புழுக்களை எடுத்துக்கொண்டு அந்த வழியாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த பறவை அந்த மனிதனிடம் சென்று, ‘இந்த புழுக்களையெல்லாம் எங்கு எடுத்துச்செல்கிறாய்’ என்று கேட்டது. அதற்கு அந்த மனிதனோ, ‘இந்த புழுக்களையெல்லாம் எடுத்துச்சென்று சந்தையில் கொடுத்து பதிலுக்கு ஒரு பறவையின் இறகை வாங்கப்போகிறேன்’ என்று சொன்னான்.

இதைக்கேட்ட அந்த பறவை, 'நான் தினமும் என்னுடைய இறகு ஒன்றை தருகிறேன். நீ தினமும் எனக்கு இதுபோல புழுக்களை எடுத்துவந்துக் கொடு' என்று சொல்லி ஒரு ஒப்பந்தம் போடுகிறது. அதற்கு அந்த மனிதனும் சரி என்று கூறுகிறான்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது போலவே அந்த பறவை தினமும் தன்னுடைய ஒரு இறகைக் கொடுத்து தனக்கு தேவையான உணவை அந்த மனிதனிடமிருந்து வாங்கிக்கொள்கிறது. எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருந்தது. அந்த ஒருநாள் வரும்வரை.

தினமும் அந்த பறவை அவ்வொரு இறகுகளை கொடுத்துக் கொடுத்து இப்போது அந்த பறவையிடம் கொடுக்க இறகேயில்லாமல் போனது. இதைப் பார்த்த அந்த மனிதன் அந்த பறவைக்கு புழுக்களையும் கொடுப்பதில்லை. இப்போது அந்த பறவையால் பறந்து சென்றும் உணவை தேடமுடியவில்லை. இதனால், பசிலேயே அந்த பறவை இறந்துப் போகிறது.

இதேபோல்தான் நாமும் நம் வாழ்வில் பணம் சம்பாதிக்க சுலபமான வழியைத் தேர்ந்தெடுத்தால் கொஞ்ச நாளிலேயே அந்த பறவையைப்போல கஷ்டப்பட வேண்டிவரும்.
எனவே, சுலபமான வழியை தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு சரியான வழியைத் தேர்ந்தெடுங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

முயற்சித்து தான் பாருங்களேன்.

Positive 🤗 Only

14 Aug, 06:47


" நீ என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் உன்னை எதாவது சொல்வார்கள். திமிர் பிடித்தவன் என்பார்கள். புத்தியில்லாதவன் என்பார்கள். இவனுக்கு எதற்கு இது என்பார்கள். இதெல்லாம் உருப்படாது என்பார்கள். லேபிள் ஒட்டினால்தான் அவர்களுக்கு திருப்தி. அடையாளச் சீட்டு கொடுத்தால் தான் அவர்களுக்கே ஆரோக்கியம்.

காதில் வாங்கி கீழே போடு. உதறி விடு. உன்னுள் எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாதே. அவர்கள் சொல்வதை எதிர்க்காதே கேட்காதே. உன்னிலும் ஒட்டாதே. இதையெல்லாம் தாண்டி நீ இருக்கிறாய் என்பதை நீ உணர்ந்து கொள். அது போதும்."


நாம் திறம்பட வாழ்வதற்கு

Positive 🤗 Only

11 Aug, 03:18


மாற்றங்கள் எல்லாம்
தோற்றங்களை மாற்றுவதற்கே....

ஓடுகின்ற நீரோடைக் கூட வருகின்ற மேடு, பள்ளங்களைத் தாண்டித் தான் பயணிக்கிறது...

தேடுகின்ற வாழ்க்கையைப் பெற,
தோல்விகளிலும் வெற்றியைக் கண்டு முன்னே வா...


*வாழ்க வளமுடன்*

Positive 🤗 Only

08 Aug, 04:12


உன் உயர்ந்த கனவுகளை அடைய எண்ணம் என்ற ஒன்றிற்கு உயிர் கொடுப்பாயானால் ஒரு நாள் உன் கனவுகள் நிஜங்களாகும் நிச்சயமாக

- ஈர்ப்பு விதி

Positive 🤗 Only

04 Aug, 05:13


ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்.

கவனித்துப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை.

தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.

எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.


வெல்பவர்கள் தளர்வதில்லை !

தளர்பவர்கள் வெல்வதில்லை !

என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.

Positive 🤗 Only

24 Jul, 03:09


பொருளாக இருந்தாலும்
நேரமாகஇருந்தாலும்
வாழ்க்கையாக இருந்தாலும்

கையில் கொடுக்கபபட்டதைத் திட்டமிட்டுப் பயன்படுத்தி வளமாக்கி பெருக்கிக் கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

எந்தத் தடைகளுக்கும் அஞ்சாதீர்கள்
அவற்றை வரவேற்று கொண்டாடுங்கள்.

தடைகள்தான் உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும்.


நெருக்கடியான காலகட்டம்தான் மிகச் சிறந்த உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டுகின்றன.

Positive 🤗 Only

19 Jul, 03:10


எப்போதும் உண்மையே பேசுங்கள்..நீங்கள் பொய் பேசினால் அந்தப் பொய்யை நீங்கள் காப்பாற்ற வேண்டும்..

அதேநேரம் நீங்கள் உண்மை பேசினால் அந்த உண்மை உங்களைக் காப்பாற்றும்..

ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டும்..ஒரு உண்மையைச் சொல்ல அப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை..

உண்மை பேசுவதில் இருக்கும் இன்னொரு சிறப்பு என்னவென்றால், நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை..

உண்மை என்றும் மாறப் போவதில்லை..பொய் சொன்னால் தான், யாரிடம் என்ன சொன்னோம்,
எங்கே சொன்னோம் என்றெல்லாம் நினைவில் வைத்து இருக்க வேண்டும்..

எப்போதும் உண்மையையே பேசுங்கள்.. உங்கள் மனதிற்கு உண்மையாய் இருங்கள்..பொய்யாக நடிக்காதீர்கள்..

மனதிற்குப் பிடிக்காததை செய்ய வேண்டாம்..
அது வருத்தத்தையே தரும்..

ஆம்.,நண்பர்களே..,

வாழ்க்கை என்பது ஒருமுறை தான்.. உண்மையாகவும்,
நேர்மையாகவும் வாழ்ந்தோம் என்ற மன நிம்மதியை நீங்களே உங்களுக்குத் தாருங்கள்

எல்லோருக்கும் உண்மையாக இருங்கள் ..ஆயிரம் நன்மை கிடைத்தாலும் பொய் மட்டும் கூறாதீர்கள் ...

ஒரு வார்த்தையில் சொல்வது என்றால்..
உண்மை உயர்வானது ...

Positive 🤗 Only

15 Jul, 12:15


மூன்று முக்கிய கதைகள்:

1. நோக்கியா ஆண்ட்ராய்டை வாங்க மறுத்தது
2. யாஹூ கூகுளை நிராகரித்தது
3. கோடாக் டிஜிட்டல் கேமராக்களை தயாரிக்க மறுத்தது

பாடங்கள்:

1. வாய்ப்புகளை ஏற்க தயாராக இருங்கள். தவறவிடாதீர்கள்.
2. மாற்றத்தை தழுவி ஏற்றுக்கொள்ளுங்கள்
3. காலத்திற்கு தக்கவாறு நீங்கள் மாற மறுத்தால், நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள்.

மேலும் இரண்டு கதைகள்:

1. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமைக் கைப்பற்றுகிறது
2. தென்கிழக்கு ஆசியாவில் உபெர் நிறுவனத்தை கிராப் கைப்பற்றுகிறது

பாடங்கள்:

1. உங்கள் போட்டியாளர்கள் உங்கள் கூட்டாளிகளாக மாறும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மாறுங்கள்.
2. வெற்றியின் உச்சத்திற்கு சென்று போட்டியை விரட்டுங்கள்.
3. புதுமையான முயற்சிகளை தொடருங்கள்.

மேலும் இரண்டு கதைகள்:

1. கர்னல் சாண்டர்ஸ் 65 வயதில் KFC நிறுவனத்தை நிறுவினார்.
2. கேஎஃப்சியில் வேலை கிடைக்காத ஜாக் மா, அலிபாபாவை நிறுவி கோடீஸ்வரர் ஆனார்.

பாடங்கள்:

1. வயது என்பது வெறும் எண் மட்டுமே.
2. தோல்வியில் சோர்ந்து போகாமல் வெறியுடன், தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி பெறுவார்கள்.

இறுதியாக:

ஃபெராரி நிறுவனர் என்சோ ஃபெராரியால் அவமதிக்கப்பட்ட டிராக்டர் உற்பத்தியாளரின் பழிவாங்கும் எண்ணம்தான் லம்போர்கினி உருவாக காரணமாக அமைந்தது.

பாடங்கள்:

யாரையும், எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்!
✔️ கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள்.
✔️ உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
✔️ தோல்விக்கு பயப்பட வேண்டாம்.


வாழ்த்துக்கள் நண்பர்களே..

Positive 🤗 Only

05 Jul, 04:46


ஜெயிக்க வேண்டும்'
என்று முடிவெடுத்து விட்டால் கண்களுக்கு தெரிய வேண்டியது காரணங்களோ, விளக்கங்களோ அல்ல"


இலக்கு மட்டுமே.!!!

Positive 🤗 Only

02 Jul, 04:17


சிறகோ சிலுவையோ
எதுவானாலும் சுமப்பதென
துணிந்துவிட்ட பிறகு
பரந்து விரிந்த வானமும்
எட்டிப் பிடிக்கும் தூரம் தான்...

துணிவொன்று வந்த பிறகு
முதுகை அழுத்தும் பாரங்கல்லாய்
இருந்தால் என்ன
இதயத்தையே துளையிட்டு
செல்லும் வீரிய விசம
வார்த்தைகளானால்
என்ன...

உனக்கு பிடித்த வேலையை செய்.

அதில் உன் திறமைகள் அனைத்தயும் வளர்த்துகொள், வெற்றி உன் காலடி தேடி ஓடி வரும்.

தோற்றுப் போன காரணங்களை மறந்து விடு


வெற்றிக்கான வழிகளைத் தேடு

Positive 🤗 Only

01 Jul, 14:17


*_ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ள...,_*

*_மனதிற்கு கற்றுக்கொடுங்கள்._*

*_அதற்கான மந்திரம், என்னவென்றால்...,_*

*_உலகில் எதுவும் நிரந்தரம் அல்ல.!_*

Positive 🤗 Only

28 Jun, 04:35


இந்த உலகம்
ஆயிரம் சொன்னாலும்

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல்

உனக்கான தகுதி என்னவென்று

நீ அறிந்து அதன் வழியே சென்று

வெற்றி காண்பதே

உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்...!!!

Positive 🤗 Only

26 Jun, 04:13


ஒரு சிறு விதையில் ஒரு விருட்சமே மறைந்திருப்பதுபோல..!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அமானுஷ்யமான சக்தி நிறைந்திருக்கிறது..!

அந்தச் சக்தியை அறிந்து, உணர்ந்து, பயன்படுத்தினால், எந்தப் பிரச்னையையும் எளிதில் சமாளிக்கலாம்; தோல்வியைத் தோற்கடிக்கலாம்; வெற்றிப் படிகளில் ஏறி, தொடமுடியாத சிகரங்களைத் தொடலாம்.

‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்’

என்கிறார் வள்ளுவர்.

வாழ்க்கையில் வெற்றி பெற, இடைவிடாத முயற்சி ஒன்றுதான் வழி என்று ஆன்றோர்களும் சான்றோர்களும் கூறியுள்ளனர்.

முயற்சி எனும் சக்திக்கு ஆதாரமானது தன்னம்பிக்கை.

‘உன்னை நீ நம்பினால், உலகம் உன்னை நம்பும்; உன்னை நீ எடை போட்டு உன்னைப் பற்றிய உண்மைகளை நீ உணர்ந்தால், உன்னை நீ நம்ப முடியும்’ என்று கூறியுள்ளார் தத்துவ ஞானி சாக்ரட்டீஸ்.

அந்தத் தன்னம்பிக்கைதான் நம்முள் ஒளிந்திருக்கும் உன்னத சக்தி. எதை இழந்தாலும், இந்தத் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது.


"வாழ்க வளமுடன்"

வெற்றிகரமான வாழ்க்கை வாழ தன்னம்பிக்கை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

Positive 🤗 Only

16 Jun, 01:01


நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும், எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன,

முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்... 😊😊

Positive 🤗 Only

12 Jun, 04:35


உங்களை எப்போதும் குறைகளே மட்டும் சொல்பவன் பொறாமை கொண்டவன் அவனை கண்டு கொள்ளாதீர்கள்.

உங்களை எப்போதும் நிறைகளை மட்டும் சொல்லி துதி பாடுபவன் சுயநலவாதிகள் அவனை நம்பாதீர்கள்

உங்களிடம் குறை, நிறைகளை சொல்பவரே உங்கள் மீது அக்கறை கொண்டவர்கள்.


அப்படி யாராவது கிடைத்தால் எப்போதும் தவறவிடாதீர்கள்
வாழ்க்கை வளமாகும்.

3,524

subscribers

370

photos

72

videos