*இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து, நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: "வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா?" என்று கேளுங்கள் என்று, சொல்லி அனுப்பினான்.* (லூக்கா 7:18,19).
நாயீன் ஊரிலே மரித்துப்போன வாலிபனை, இயேசுகிறிஸ்து உயிரோடு எழுப்பிய செய்தி, யூதேயா தேசம் முழுவதிலும், அதைச் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும், பிரசித்தமாயிற்று. இக்காலத்தில் யோவான்ஸ்நானன் காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார். யோவானுடைய சீஷர்கள், இந்தச் செய்தியை சிறைச்சாலையில் காவல் பண்ணப்பட்டிருக்கும் யோவானுக்கு அறிவிக்கிறார்கள். யோவான் காவலில் கட்டப்பட்டிருந்தாலும், இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை யாராலும் கட்டி வைக்கமுடியாது. இயேசுகிறிஸ்துவின் கிரியைகளை யாராலும் அடக்கி வைக்கமுடியாது. *இயேசுகிறிஸ்துவின் செய்தி சிறைச்சாலைக்குள்ளும் பிரசித்தமாயிற்று.*
இயேசுகிறிஸ்து நடப்பித்த அற்புதத்தைக் கேட்டவுடன், அவன் தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து, அவர்களை இயேசுகிறிஸ்துவிடம் அனுப்புகிறான். "வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா" என்று இயேசுகிறிஸ்துவிடம் கேட்பதற்காக அனுப்புகிறான்.
"வருகிறவர் என்பது, யூதர்கள் நெடுங்காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும், வாக்குப்பண்ணப்பட்ட மேசியா ஆவார்!"
யோவான்ஸ்நானன் தன்னுடைய விசுவாசத்தை உறுதிபண்ண விரும்புகிறார். இயேசுதான் வரவேண்டிய மேசியாவா என்பதை உறுதிபண்ணுவதற்காக, தன்னுடைய சீஷரில் இரண்டுபேரை அவரிடத்தில் அனுப்புகிறார்.
இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்தபோது, யூதமார்க்கத்தார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இயேசுவை மேசியா என்று அங்கீகரிக்கவில்லை. "மேசியா இப்படித்தான் வருவாரென்று யூதர்கள் கற்பனை செய்து சில காரியங்களை எதிர்பார்த்தார்கள்." ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பிரகாரமாக மேசியா ஆடம்பரமாகவும், விளம்பரமாகவும் வரவில்லை. இந்த உலகத்திற்கு அவர் சாதாரண மனுஷகுமாரனாகவே வந்தார். ஆகையினால்தான், இயேசுவை பார்த்தபோது யூதமார்க்கத்துத் தலைவர்கள் அவரை "நீர்தான் மேசியாவா?" என்று கேட்கிறார்கள். யூதர்கள் எதிர்பார்க்கும் அடையாளமோ, ஆடம்பரமோ இயேசுகிறிஸ்துவிடம் காணப்படவில்லை. யோவான்ஸ்நானனும் இயேசுதான் மேசியாவா என்னும் சத்தியத்தை உறுதிபண்ண விரும்புகிறார். ஆகையினால், "வருகிறவர் நீர்தானா" என்னும் கேள்வியை அவரிடத்தில் கேட்பதற்கு தன் சீஷரில் இரண்டு பேரை அனுப்புகிறார்.
யோவான்ஸ்நானன் இந்த வேளையில் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டிருக்கிறார். (மத் 4:12; மத் 9:14) இயேசு கிறிஸ்து மரித்தோரை எழுப்புகிறார். அப்பேர்ப்பட்ட வல்லமையுள்ளவர் இருக்கும்போது, தான் ஏன் சிறைச்சாலையில் அடைப்பட்டிருக்க வேண்டும் என்று ஆச்சரியப்பட்டிருப்பார்.
இயேசுவிற்கு யோவான்ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்தார். அவருக்கு இயேசுவைப் பற்றி நன்றாகத் தெரியும். இருந்தாலும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார். அவர் இயேசுவைப் பற்றிச் சாட்சிக் கூறியிருக்கிறார். (மத் 3:11; யோவான் 1:29#33). யோவானுடைய கேள்விக்கு இயேசு கிறிஸ்து நேரடியாகப் பதில் கூறாமல், அவனுடைய சீஷர்களிடம் *நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்* என்று பதில் கூறுகிறார். *தாமே மேசியா என்பதுதான் இதன் பொருள்*. தம்மைப் பற்றி தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த காரியங்களை இயேசு கிறிஸ்து யோவானின் சீஷர்களுக்கு முன்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். வேதவாக்கியம் இயேசு கிறிஸ்து மூலமாக நிறைவேறுகிறது. ( 7:21#23) *நம்மிடத்திலும் அவர் தம் பரிபூரண சித்தத்தை நிறைவேற்றுவார்! ஆமென்!*
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________