அவரோடு அன்பர்களும், ஐதீக நாடகத்தில் பங்கு பெறும் முருகன், நவவீரர்கள், நாரதர் முதலியோரும் சபைக்கு வருகின்றனர். நடராஜரின் இடப்பக்கத்தில் இருக்கும் சிவகாமி அம்பிகையின் கரத்தில் வேல் வைக்கப்பட்டு தீபாராதனை ஆனதும் அது முருகன் திருக்கரத்தில் வைக்கப் படுகிறது. பின்னர் முருகன் அன்பர்களும் ஐதீக நாடக நடிகர்களும் தொடர சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளுகின்றார்.
முருகன் முத்துக்குமாரசுவாமி என்னும் பெயரில் கோலாகலமாக வீற்றிருக்கும் வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழாவில் முருகன், கருவறைக்கு முன்பாக எழுந்தருளி மூலவரான வைத்தியநாத சுவாமியிடமிருந்தே வேலாயுதத்தைப் பெறுகிறார். இவை மகா கந்தபுராணத்தில் சிவபெருமான் முருகனுக்கு வேலாயுதத்தை அளித்ததை அடியொற்றி நடத்தப்படுவதாகும்.( புராண மரபு)
புகழ் பெற்ற ஆலயங்களில் நவரத்தினக் கற்கள் இழைத்த விலைமதிப்பு மிக்க வேலாயுதம் முருகனுக்கு அணிவிக்கப்படுகிறது.
நவரத்தினங்களால் ஆன வேலாயுதங்களை முருகனின் தம்பியரான நவவீரர்கள் ஏந்துகின்றனர். இவர்கள் அன்னை பராசக்தியின் பிரதி பிம்பத்திலிருந்து தோன்றிய நவரத்தின மங்கையராகிய 1) மாணிக்கவல்லி 2) முத்துவல்லி 3) புஷ்பராகவல்லி 4) கோமேதகவல்லி 5) வைடூர்யவல்லி 6) வைரவல்லி 7) மரகத வல்லி, 8) பவள வல்லி 9) நீலவல்லி ஆகிய ஒன்பதின்மரின் குமாரர்களாவர்.
முருகன் தன் தாயிடமிருந்து வேலாயுதத்தைப் பெற்றதைப் போலவே இவர்களும் தத்தம் தாயிடமிருந்து வேலாயுதங்களைப் பெற்றனர்.
அவையே நவரத்தினவேல்களாகும் - மாணிக்க வேல், முத்தவேல், புஷ்பராக வேல், கோமேதக வேல், வைடூர்ய வேல், வைர வேல், மரகத வேல், பவள வேல், நீல வேல். இந்த ஒன்பதின்மரும் தமக்குரிய வேலுடன் முருகனோடு விளையாடி மகிழ்வதை பழைய கால ஓவியங்களில் கண்டுகளிக்கலாம்.
மக்கள் முத்துேவல், மரகதேவல், மாணிக்கவேல், வஜ்ரவேல்மற்றும் பொதுவாக ரத்தினவேல் என்று பெயர்களைச் சூட்டுகின்றனர்.
''வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை''
வேல் அறிவின் அடையாளம். மயில் ஓங்காரத்தின் அடையாளம். துன்பம் வரும் வேளையில் ஓங்கார வேலன் அறிவாக வந்து நமக்கு நல்ல சிந்தனையைத் தந்து காப்பாற்றுவான் என்பதால்தான் வேலும் மயிலும் துணை என்றார்கள்.
''தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க் கரத் திருக்கும் வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவ தெமக்கு வேலை''
– சைவ எல்லப்பநாவலர்
முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு ‘வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.
பாம்பன் சுவாமிகள் இதனை ‘படை அரசு’ என்று போற்றுவார். ‘படைநாயகம்’ என்றும் பெயருண்டு.
சூரபத்மனுடன் போரிடுவதற்கு போர்க் கோலம் பூண்டுவந்த முருகனிடம், சிவபெருமான் பதினோரு ஆயுதங்களுடன் மிகவும் மகிமை பொருந்திய வேலாயுதத்தையும் அளித்தார் என்கிறது கந்தபுராணம். அருணகிரிநாதரும் சிவபிரான் வேல் அளித்த செய்தியை திருப்புகழில் காட்டுகிறார். எனினும், அம்பிகை பராசக்தி, முருகனுக்கு வேல் கொடுத்த செய்தியை மிகச் சிறப்பாக, '‘எம் புதல்வா வாழி வாழி எனும்படி வீறான வேல்தர என்றும் உளானே மநோகர…’' என்று பாடுகிறார் அருணகிரிநாதர். இச் செய்தியை கல்லாடம் நூலிலும் காண முடிகிறது.
வேல் தத்துவம் பற்றி விவரிக்கும் ஆன்றோர்கள், பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட் சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவாய் உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும். ''வேலாயுதம்'' பஞ்சாட்சர மூலமந்திரம் ஆகும் என்றும் சிறப்பிப்பார்கள்.
சூரனை அழிக்க வேல் ஏவிய செய்தியைச் சொல்ல வந்த அருணகிரியார், '‘சிவம் எனும் அஞ்செழுத்தை முந்த விடுவோனே'’ என்று குறிப்பிடுவார். எனவே, வேலாயுதத்துக்கு மேலாயுதம் எங்கும் இருப்பதற்கில்லை.
மொத்தத்தில்… பரம்பொருளின் பேரருள், பேராற்றல், பேரறிவு ஆகிய மூன்றும் நிறைந்து, ஒன்றி நின்று சமைந்து, உயிர்களின் எளிய இயல்புக்கேற்ப இயங்கிப் பிறங்குவதே வேலின் உருவமாய் உள்ளது.
பெறுதற்கரிய பேறுகள் எல்லாவற்றிலும் தலையாயது அறிவுப் பேறு ஒன்றே!
அறிவுக்கு மூன்று இலக்கணங்கள் உண்டு. அவை ஆழம், அகலம், கூர்மை என்பன. அறிவு ஆழமாக இருக்கும்; பரந்து விரிந்து விளங்கும்; கூர்மையாகத் திகழும்.
இப்போது வேலாயுதத்தை நினையுங்கள். வேலின் அடிப்பகுதி ஆழமாக அமைந்துள்ளது. இடைப்பகுதி விசாலமாக விளங்குகிறது. நுனிப் பகுதி கூர்மையாகத் திகழ்கிறது.
அறிவில்லாதவனை ‘கூர் கெட்டவன்’ என்பார்கள். ‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே’ என்று சிவப்பரம்பொருளைப் பாடுவார் மாணிக்கவாசகர். சிவப்பரம்பொருளே முருகன்;முருகனே சிவப்பரம்பொருள்.எனவே அறிவு, ஞானம், வேல் என்பன ஒரே பொருளைத் தரும் சொற்கள் .